வெனிசுலா சிறைக் கலவரத்தில் 50பேர் பலி; 90பேர் காயம்

தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் சிறைக் கைதிகளுக்கும் பொலிஸாருக்கும் இடையில் ஏற்பட்ட கலவரத்தில் 50 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் 90பேர் காயமடைந்துள்ளனர் என்று வெனிசுலா சிறைச்சாலை அமைச்சர் இரிஸ் வெரிலா தெரிவித்துள்ளார்.   

வெனிசுலாவின் தென்மேற்கு நகரமான பார்குயிசிமெடோவிலுள்ள உரிபானா மத்திய சிறைச்சாலையிலேயே மேற்படி கலவரம் இடம்பெற்றுள்ளது. மேற்படி சிறைக்கைதிகள் ஆயுதங்களை பதுக்கி வைத்திருப்பதாக கிடைக்கப்பெற்ற தகவரை அடுத்து அங்கு சென்ற பொலிஸார் சோதனைகளை நடத்தியுள்ளனர். 

அதைத் தொடர்ந்து பொலிஸாரை சிறைக் கைதிகள் தாக்கியுள்ளனர். பதிலுக்கு பொலிஸாரும் தாக்கியதால் கலவரம் ஏற்பட்டுள்ளது. அப்போது இரு தரப்பினருக்கும் இடையில் பரஸ்பரம் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

இந்த தாக்குதலில் 50 பேர் உயிரிழந்தனர். 90 பேர் காயம் அடைந்துள்ளனர். பலியானவர்களில் கைதிகள், பொலிஸார் மற்றும் சமூக சேவகர்கள் அடங்குகின்றனர். காயமடைந்தவர்கள் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.