வெளிமாவட்ட சிங்களவருக்கு வவுனியாவில் காணிகளை வழங்க இராணுவம் அவசர பதிவு

வெளிமாவட்ட சிங்கள மக்களுக்கு வவுனியாவில் காணி வழங்குவதற்காக அவர்களைப் பதிவு செய்யும் நடவடிக்கைகளை இராணுவம் அவசரமாக மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்  வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், இதனை உடனடியாகத் தடுத்து நிறுத்துமாறு அரசாங்கத்தைக் கோரியுள்ளார்.

இது தொடர்பில் சிவசக்தி ஆனந்தன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; காணியற்ற சிங்கள மக்களை பதிவு செய்யும்படி வவுனியா ஏ  9 வீதியில் 56 ஆவது படைப் பிரிவு அறிவித்தல் பெயர்ப் பலகை ஒன்றைப் போட்டு, பெருந்தொகையான தென்பகுதியைச் சேர்ந்த சிங்கள மக்களைப் பதிவு செய்யும் நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டுவருகின்றது. இந்த பதிவுகள் அனைத்தும் இராணுவத்தினால் மேற்கொள்ளப்படுகின்றது.

ஏ  9 வீதிக்கு கிழக்குப் பக்கமாக அமைந்துள்ள சேமமடுவை அண்டிய கிராமத்திலும் ஏனைய இடங்களிலும் இவர்களுக்கான காணி வழங்கப்பட இருப்பதாக இராணுவத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை உடனடியாக தடுத்து நிறுத்தும்படி ஜனாதிபதி, பாதுகாப்புச் செயலாளர், சம்பந்தப்பட்ட அமைச்சர் ஆகியோரிடம் ஊடகங்கள் மூலம் கேட்டுக்கொள்கின்றேன்.

காணி வழங்கல் அதிகாரம் இராணுவத்திற்குக் கிடையாது. ஆனால் இராணுவம் வடக்கில் சகல சிவில் நிர்வாகத்திலும் தலையிடுவதனால் சிவில் அதிகாரிகள் தங்களது கடமைகளைச் செய்யமுடியாது ஒதுங்கியிருக்கின்றார்கள். இந்த நிலையில் வடக்கில் சிவில் நிர்வாகம் ஏற்படுத்தப்பட்டுவிட்டது என அரசாங்கம் கூறுவது வெறும் கேலிக்கூத்தாகவே உள்ளது. 

கடந்த வாரம் வவுனியாவில் கொக்கச்சான்குளத்தில் ஆயிரம் குடும்பங்கள் இராணுவம் மற்றும் பௌத்த பிக்குகளின் உதவியுடன் குடியேற்றம் செய்யப்பட்டு அவர்களுக்குத் தேவையான சகல வசதிகளும் செய்து கொடுக்கப் படுகின்றது. அதே இடத்தில் இன்னும் 2000 சிங்கள குடும்பங்களை கொண்டுவந்து குடியேற்றுவதற்கான நடவடிக்கை இராணுவத்தினால் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது.

இந்த நிலையில், வவுனியா பேயாடிகூழாங்குளம் 56 ஆவது படைப்பிரிவு காணியற்ற சிங்களவருக்கு காணிகளைக் கொடுப்பதற்கான பதிவை மேற்கொள்வதானது தமிழ் மக்கள் மத்தியில் கடும் விசனத்தையும் சீற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 

போரினால் பாதிக்கப்பட்ட வன்னி மற்றும்  யாழ் மாவட்டங்களைச் சேர்ந்த இரண்டரை இலட்சம் மக்கள் தமது வீடுகள், சொத்துக்கள் உயிர் உடமைகள் என்பனவற்றையெல்லாம் இழந்து நிர்க்கதியான நிலமையில் இயல்பு வாழ்விற்கு திரும்பமுடியாமல்  தத்தளித்துக்கொண்டிருக்கின்றார்கள். இதனைவிட சில பகுதிகள் இராணுவம் உயர் பாதுகாப்பு வலயம் என்று தமது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கின்றது. 

மன்னாரில் முள்ளிக்குளம், மடு மற்றும் முல்லைத்தீவு மாவட்டத்தில் கேப்பாப் பிலவு, முள்ளிவாய்க்கால், திருமுறிகண்டி, யாழ். மாவட்டத்தில் வலிகாமம் கிழக்கு, திருகோணமலை மாவட்டத்தில் சம்பூர் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மக்கள்  சொந்தக் காணிகளில் மீளக் குடியேற முடியாமல்  அகதி முகாம்களிலும் உறவினர், நண்பர்கள் வீடுகளிலும் சொல்லமுடியாத துயரங்களுடன் வாழ்ந்துகொண்டு இருக்கின்றார்கள்.

இதேவேளையில் வன்னி மாவட்டத்திலும் ஆயிரக்கணக்கான ஏக்கர் காடுகள் அழிக்கப்பட்டு அவசர அவசரமாக முஸ்லிம்களையும், சிங்களவர்களையும் குடியேற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வன்னி மாவட்டத்திலிருந்து தெரிவான அமைச்சர் ஒருவரும், இராணுவமும் ஆளுனரும் இந்த நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றார்கள். இதன் உள் நோக்கம் என்ன? 

மன்னார், முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களில் குறிப்பிட்ட காடழிப்பு மேற்கொள்ளப்படும் பிரதேசங்களில் எந்தக் காலங்களிலும் சிங்கள, முஸ்லிம் மக்கள் வாழ்ந்ததே கிடையாது. ஆகவே இது ஓர் அத்து மீறின குடியேற்றம். இவர்கள் தாம் வாழ்ந்த பிரதேசங்களில் மீளக் குடியேறுவதில் எந்த ஒரு தமிழ் மகனுக்கும் ஆட்சேபனை இல்லை. 

போரினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் மீள்குடியேற்றம் அபிவிருத்தி என்பனவற்றில் கவனம் செலுத்துவதை விடுத்து சிங்கள முஸ்லிம் அவசர அத்து மீறிய குடியேற்றங்களை  செய்வதனூடாக இனங்களுக்கிடையில் ஜனாதிபதி கூறுகின்ற நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாது. இது நல்லிணக்கத்தை மேலும் பாதிப்பதாகவே அமையும். இந்த அத்துமீறல் குடியேற்றங்களையும் காடழிப்புக்களையும் தடுத்து நிறுத்த உரிய நடவடிக்கை எடுக்கும்படி சம்பந்தப்பட்டவர்களை மக்களின் சார்பில் கேட்டுக்கொள்கின்றேன்.‘‘