வேட்பாளர் சுவரொட்டிகள் கிழிப்பு இரவிரவாக படையினர் விசாரணை; ஆறுகால்மடம் பகுதியில் பதற்ற நிலை

வடக்கு மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின்  சார்பில் யாழ்ப்பாண மாவட்டத்தில் போட்டியிடுகின்ற ஆளும் கட்சி வேட்பாளருடைய தேர்தல் பிரசார சுவரொட்டிகள் ஆனைக்கோட்டை  ஆறுகால்மடம் பகுதியில் கிழித்து வீசப்பட்ட நிலையில் அப்பகுதியில் பெருமளவு இராணுவத்தினர் குவிக்கப்பட்டு, இது குறித்து மக்கள் இரவிரவாக விசாரிக்கப்பட்டுள்ளனர்.

இராணுவத்தினரின் இந்த விசாரணை காரணமாக நேற்று முன்தினம் இரவு ஆறுகால்மடம்  பழம் வீதி பகுதியில் பதற்ற நிலை காணப்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

ஆளும் கட்சி சார்பில் போட்டியிடும் சிராஸ் என்பவரின் தேர்தல் பிரசார சுவரொட்டிகள் கிழிக்கப்பட்டமை தொடர்பிலேயே இந்த விசாரணை இடம்பெற்றதாக தெரியவருகிறது. நேற்றுக் காலையிலும் இந்தப் பகுதிக்குச் சென்ற இராணுவத்தினர், சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டதாக பிரதேச வாசிகள் கூறினர்.