ஹிரோஷிமா, நாகாசாகி அணு குண்டு வீச்சின் 68வது நினைவு நாள் இன்று

ஜப்பானின் ஹிரோஷிமா, நாகாசாகி ஆகிய நகரங்களின் மீது அணு குண்டு வீசப்பட்டமையினால் உயிரிழந்தவர்களின் 68வது நினைவு நாள் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது. 

1945ம் ஆண்டு நடந்த இரண்டாம் உலகப் போரின் போது ஜப்பானின் ஹிரோஷிமா, நாகாசாகி ஆகிய நகரங்களின் மீது அடுத்தடுத்து அணு குண்டுகள் வீசப்பட்டன. 

ஹிரோஷிமா நகரின் மீது 6-8-1945 அன்று அதிகாலை நடத்தப்பட்ட தாக்குதலில் ஒரு இலட்சத்து 40 ஆயிரம் பேர் பலியாகினர். 

இந்த குண்டு வீச்சின் போது பாதிக்கப்பட்ட சுமார் 2 இலட்சம் ஜப்பானியர்கள் இன்று காலை ஹிரோஷிமா நகரில் கூடி அணு குண்டு வீச்சில் பலியான மக்களின் ஆன்மா சாந்தியடைய ஊதுபத்திகளை ஏற்றி பிராத்தனை செய்தனர். 

இந்த பிராத்தனையில் பங்கேற்ற ஹிரோஷிமா நகர மேயர் கசுமி மட்சுயி, ´அணு குண்டு என்பது மனிதத் தன்மைக்கு அப்பாற்பட்ட கெடுதலான ஆயுதம். இதன் தாக்கத்தால் பாதிக்கப்பட்ட இலட்சக்கணக்கான மக்கள் இந்த தீமையை எதிர்த்து தொடர்ந்து போராடி வருகிறார்கள். 

எனவே, அணு உலைகளை மீண்டும் இயக்கும் முயற்சியை நமது அரசு கைவிட வேண்டும். அணு தொழில்நுட்பத்தை மற்ற நாடுகளுக்கு வழங்குவதையும் முற்றிலுமாக கைவிட வேண்டும்´ என்றார்.