ஹிலரியை ஒரே நாளில் ஒரு லட்சம் பேர் தொடர்ந்தனர்

அமெரிக்க முன்னாள் வெளியுறவுத்துறைச் செயலாளரும் அடுத்த ஜனாதிபதிக்கான வேட்பாளராகக் கருதப்படுபவருமான ஹிலரி க்ளிண்டன் ட்விட்டரில் சேர்ந்த முதல் நாளிலேயே ஒரு லட்சம் பேர் பின் தொடர ஆரம்பித்துள்ளனர். 

தற்போது அமெரிக்க அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுவது ஹிலரியின் ட்விட்டுகள் பற்றித்தான். 

ஹிலரியின் பயோடேட்டாவில், மனைவி, அம்மா, அட்வகேட், அர்கான்சா மாநில முதல் பெண்மணி, அமெரிக்காவின் முதல் பெண்மணி, அமெரிக்க செனட் உறுப்பினர், வெளியுறவுத் துறை செயலாளர் என அவரது வரலாற்றை வரிசைப்படுத்தும் விதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

அவர் நாய் வைத்து இருப்பது கூட இடம் பெற்றுள்ளது. இறுதியில் TBD, அதாவது முடிவு செய்யப்பட வேண்டியது என்பதை குறிக்கும் To Be Decided என்ற வாக்கியத்தின் சுருக்கமாக எழுதப்பட்டுள்ளது. 2016 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதைத்தான் இப்படி சூசகமாக குறிப்பிட்டுள்ளார் ஹிலரி. 

ட்விட்டரில் ஹிலரியை வரவேற்று ஜனாதிபதி ஒபாமா ட்வீட் செய்து வாழ்த்து தெரிவித்துள்ளார். மனைவியை வரவேற்று முன்னாள் ஜனாதிபதி பில் க்ளிண்டனும் வாழ்த்து தெரிவித்துள்ளர். 

அவரது மகள் செல்சியும் தாயை வரவேற்றுள்ளார். குடும்பமாக ட்வீட் செய்ய ட்விட்டர் நிறுவனம் ஏதும் வசதி செய்து கொடுத்திருக்கிறார்களா என்று பில் க்ளிண்டன் ட்விட்டரிலேயே கேள்வி எழுப்பியுள்ளார் 

செனட் மெஜாரிட்டி லீடர் ஹாரி ரீட், நியூயார்க் செனட்டர் சக் சூமர் உள்ளிட்ட மற்ற அரசியல் பிரபலங்களும் ஹிலரிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். 

அமெரிக்க தேர்தல்களிலேயே இணையதளத்தை முழுமையாக பயன்படுத்தி ஜனாதிபதி தேர்தலில் வெற்றியை ஈட்டியவர் ஜனாதிபதி ஒபாமா முதன்மையானவர். 

அவர் வழியிலே, அதை மேலும் மெருகேற்றி, வாக்காளர்களை கவர்வதற்கு முன்னோட்டமாகத்தான் ஹிலரியின் ட்விட்டர் வரவு கருதப்படுகிறது.