நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள தேரெழுந்தூரை சேர்ந்தவர் சின்ன ராஜா (26). இவர் திருப்பூரில் பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார்.
தற்போது பொங்கல் பண்டிகைக்கு ஊருக்கு வந்து இருந்தார். இவரது மனைவி தீபா (22). இவர்களுக்கு சிந்துஜா (1) நித்யஸ்ரீ (3 மாதம்) ஆகிய 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.
சின்னராஜாவுக்கும் அவரது மனைவி தீபாவிற்கும் குடும்ப தகராறு இருந்து வந்தது. நேற்று மாலை சின்னராஜா தனது குடும்பத்தினருடன் கடலூர் மாவட்டம் காட்டு மன்னார் கோவிலில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்தார்.
முடிகண்ட நல்லூர் கொள்ளிடம் ஆற்றங்கரை வரை அவர்கள் ஆட்டோவில் வந்து இறங்கினார்கள். பின்னர் ஆற்றை கடந்து நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது தீபா தனது கணவர் குறித்து ஏதோ கூறியதாக தெரிகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த சின்ன ராஜா தான் மறைத்து வைத்திருந்த பிளேடால் தீபாவின் கழுத்து மற்றும் பல்வேறு இடங்களில் கிழித்தார். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார்.
அதன் பின்னர் சின்னராஜா சேலையால் தீபாவின் கழுத்தை நெரித்தார். இதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். அதன் பின்னரும் ஆவேசம் தணியாத சின்னராஜா தீபாவின் கையில் இருந்த 3 மாத குழந்தை நித்யஸ்ரீயை தூக்கி தரையில் ஓங்கி அடித்து கொன்றார். இதில் குழந்தை இறந்தது.
தாய் மற்றும் தங்கையை கொடூர தந்தை கொலை செய்தததை அருகில் நின்று கொண்டிருந்த சிந்துஜா பார்த்து அதிர்ச்சி அடைந்தாள். அவள் அங்கிருந்து தப்பி ஓடினாள். மனைவி, குழந்தையை கொலை செய்த சின்னராஜா அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். அதன் பின்னர் சிறுமி சிந்துஜா அங்கு வந்தாள். பிணமாக கிடந்த தாய், தங்கையை பார்த்து கதறி அழுதாள்.
உடனே அப்பகுதியில் ஆடு மேய்த்து கொண்டிருந்தவர்கள் அங்கு வந்தனர். அவர்கள் இந்த இரட்டை கொலை குறித்து மணல் மேடு பொலிசுக்கு தகவல் தெரிவித்தனர். பொலிசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையே கொலை நடைபெற்ற இடத்தில் இருந்து சற்று தூரத்தில் ரத்தக் கறையுடன் சுற்றி திரிந்த சின்னராஜாவை பொது மக்கள் மடக்கி பிடித்தனர். அவரை மணல்மேடு போலீசில் ஒப்படைத்தனர். இதனை தொடர்ந்து கைது செய்யப்பட்டார்.
பொலிசில் அவர் கொடுத்த வாக்குமூலத்தில் மனைவி தன்னை அவமரியாதையாக பேசியதால் கொன்றதாக கூறி உள்ளார். மனைவி மற்றும் 3 மாத குழந்தையை வாலிபர் கொலை செய்த சம்பவம் மணல்மேடு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.