46 வருடங்களுக்கு முன் எடுத்துச் சென்ற வியட்நாம் வீரரின் எழும்பை மீள ஒப்படைத்த வைத்தியர்

சுமார் 46 வருடங்களுக்கு முன்னதாக துண்டிக்கப்பட்ட, தனது வலது கையின் எலும்பை மருத்துவர் ஒருவரின் உதவியால், தற்போது மீண்டும் பெற்றுள்ளார் வியட்நாம் இராணுவ வீரர் ஒருவர். 

1966-ம் ஆண்டு அமெரிக்ககா, வியட்நாம் ஆகிய நாடுகளுக்கிடையே நடந்த போரில், அமெரிக்க இராணுவத்தின் திடீர் தாக்குதலால் குயென் குவாங் ஹங் என்ற வியட்நாம் வீரர் தனது வலது கையில் குண்டடி பட்டார். 

குண்டு பாய்ந்த கையோடு அரிசி களஞ்சியசாலை ஒன்றில் ஒளிந்திருந்த ஹங், மூன்று நாட்களுக்குப் பிறகு, அழுகிய கைகளோடு, அமெரிக்க இராணுவத்தினரால் மீட்கப்பட்டார். 

அமெரிக்க இராணுவ வைத்தியர் சாம் ஆக்சல்ராட்டிடம் சிகிச்சை பெற்ற ஹங்கின் வலது கை துண்டிக்கப்பட்டது. அழுகிய சதைகளை நீக்கிய சாம், எஞ்சிய ஹங்கின் வலது கை எலும்பை எடுத்துக் கொண்டு அமெரிக்கா சென்று விட்டார். 

இந்தநிலையில், கடந்தாண்டு பத்திரிக்கை ஒன்றில் வியட்நாம் வீரரான 73 வயது ஹங் தற்போது உயிருடன் இருக்கும் செய்தியை படித்த வைத்தியர் சாம், 40 வருடங்களுக்கு மேலாக தான் பாதுகாத்து வைத்திருக்கும் ஹங்கின் கை எலும்பை கொடுக்க விரும்புவதாக பதில் செய்தி வெளியிட்டார். 

இதனால், இருவரும் சந்தித்துக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டது. மகன்கள் மற்றும் பேரக் குழந்தைகளுடன் வந்திருந்த வைத்தியர் சாம், தான் பாதுகாப்பாக வைத்திருந்த ஹங்கின் வலது கை எலும்பை ஹங்கிடம் ஒப்படைத்தார். 

அதனை தனது இடது கையால் பெற்றுக் கொண்ட ஹங், வைத்தியருக்கு நன்றி கூறினார்.