7000 திர்ஹமுக்கு ஏலம் போகும் 1 1/2 லிட்டர் குடிநீர் போத்தல்?

துபாயில் இணையத்தளத்தில் ஏலம் விடப்பட்ட 1 1/2 லிட்டர் குடிநீர் போத்தலுக்கு அதிக கிராக்கி ஏற்பட்டுள்ளது. இந்த மாத இறுதி வரை இடம்பெறும் இந்த ஏலத்தில் இறுதி தொகை 7 ஆயிரம் திர்ஹம்மை (Dirham) கடக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

துபாயில் இயங்கி வரும் ´துபாய் கேர்ஸ்´ என்ற தொண்டு நிறுவனம் ஏழ்மை நிலையில் உள்ள நாடுகளில் வாழும் குழந்தைகளின் கல்விக்காக நிதியுதவி செய்து வருகிறது. 

இந்த கல்வி தொண்டுக்காக இயற்கை தாதுக்கள் நிறைந்த ´மாசாபி´ என்ற 1 1/2 லிட்டர் குடிநீர் போத்தலை இணையதளம் மூலம் ஏலத்தில் விட அந்நிறுவனம் தீர்மானித்தது. 

அடிப்படை விலையான 1 1/2 திர்ஹம் என்ற அளவில் இருந்து தொடங்கிய இந்த ஏலம், கடந்த (மே) மாதம் 9ம் திகதி நிலவரப்படி 5 ஆயிரம் 500 திர்ஹம் என்ற நிலையை எட்டியுள்ளது. 

ஜூன் 30ம் திகதி வரை ஏலம் தொடரும் என்பதால் ஏலத்தின் இறுதி தொகை 7 ஆயிரம் திர்ஹத்தை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

ஒரு திர்ஹமின் தற்போதைய இலங்கைப் பெறுமதி 34.41 என்பது குறிப்பிடத்தக்கது.